Monday, January 25, 2016

“மேலும்” தமிழ் இலக்கிய அமைப்பு திருநெல்வேலியில் நடத்தும் தமிழ்-2015 தமிழ்இலக்கியப்போக்குகள் குறித்த கருத்தரங்கம்




   2015 இல் தமிழ்இலக்கியப் போக்குகள் குறித்த இருநாள் கருத்தரங்கு
திருநெல்வேலியில் இயங்கிவரும் “மேலும்”தமிழ்இலக்கிய அமைப்பின் சார்பில் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையத்தில் தமிழ்படைப்பிலக்கியம், ஊடகம் தொடர்பான இருநாள் கருத்தரங்கம் சனவரி 30,31 ஆகிய இருநாட்கள் நடைபெற உள்ளன. அக்கருத்தரங்கு குறித்து “மேலும்” தமிழ் இலக்கிய அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் மேலும் சிவசு, தலைவர் பேராசிரியர் வே.கட்டளை கைலாசம், செயலாளர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..

தமிழ்இலக்கியம் குறித்த திறனாய்வுப் போக்கை ஆய்வுநோக்கில் கல்விப்புலங்களில் வளர்க்கும் பொருட்டு ஒவ்வோர் ஆண்டும் தமிழகக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் பயிலும் இளமுனைவர்,முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு தமிழ்ப்படைப்புலகம் குறித்த கருத்தரங்குகளையும் பயிலரங்குகளையும் தொடர்ந்து நடத்திவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் திறனாய்வுத்துறையில் சிறந்துவிளங்கும் தமிழ்த்திறனாய்வாளர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு ரூ 25000 பொற்கிழியையும் ‘மேலும்’ திறனாய்வாளர் விருதினையும் வழங்கிவருகிறது.தமிழ்ப்படைப்பிலக்கியத்துறையில் சிறந்துவிளங்கும் இளம்படைப்பாளர் ஒருவருக்கு மேலும் இளம்படைப்பாளர் விருதினையும் தொடர்இந்து வழங்கிவருகிறது.

தமிழ்-2015 தமிழ்இலக்கியத் திறானாய்வுக் கருத்தரங்கு

2015 ஆம் ஆண்டு தமிழ்க்கல்வி, தமிழ்க்கவிதை,தமிழ்நாடகம்,தமிழ்ச் சிறுகதை,தமிழ்ப் புதினம்,தமிழ்த் திரைப்படம், தமிழ்ச் சிற்றிதழ், தமிழ்த் திறனாய்வுப் போக்குகள் குறித்து ஆராய்ந்து அதன்போக்குகள் குறித்து தமிழகக் கல்லூரிகளில் பயிலும் ஆய்வுமாணவர்களுக்குத் தெளிவுபடுத்தும்பொருட்டு “மேலும்” தமிழ்இலக்கிய அமைப்பு திருநெல்வேலி.ஆர்.டி.ஓ.அலுவலகம் அருகில் உள்ள  தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையத்தில் சனவரி 30,31 ஆகிய இருநாட்கள் நடத்துகிறது. தமிழகத்தின் பிரபல பேராசிரியர்கள், தமிழ்ப் படைப்பாளிகள், தமிழ்த் திறனாய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், முனைவர் பட்ட ஆய்வுமாணவர்கள், தமிழ்த்துறைத் தலைவர்கள் பங்கேற்று விவாதங்களை மேற்கொள்ள உள்ளனர்.

தொடக்கவிழா

கருத்தரங்கத் தொடக்கவிழா சனவரி 30 அன்று காலை 10 மணிக்கு தமிழ்வளர்ச்சிப் பண்பாட்டு மையக் கலையரங்கில் நடைபெறுகிறது. கருத்தரங்கத் தலைவராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் அ.ஜான்-டி- பிரிட்டோ கலந்துகொண்டு கருத்தரங்கைத் தொடங்கிவைத்துத் தலைமையுரை ஆற்றுகிறார்


 
மேலும் அமைப்பின் தலைவர் பேராசிரியர் வே.கட்டளை கைலாசம் வரவேற்றுப் பேசுகிறார்.அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் “மேலும்” சிவசு கருத்தரங்க நோக்குரை வழங்குகிறார். தமிழ்வளர்ச்சிப் பண்பாட்டு மையத் துணைத் தலைவர் தி.த.ரமேஷ் ராஜா, திருநெல்வேலி அகிலஇந்திய வானொலியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் கண்ணையன் தட்சணாமூர்த்தி,சிறுகதைப்படைப்பாளர் வழக்கறிஞர் எம்.எம்.தீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் மகாதேவன் நன்றியுரையாற்றுகிறார்.
 

அமர்வு- 1  தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கான வழிமுறைகள்
“தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கான வழிமுறைகள்” எனும் பொருளில் காலை 11 -12 வரை நடைபெறவுள்ள அமர்வில் போலந்து வார்சா பல்கலைக்கழகப் பேராசிரியர் தமிழவன் சிறப்புரையாற்றுகிறார்.தமிழாசிரியர் அசின் தங்கராஜ் அவ்வமர்வில் கருத்துரை வழங்குகிறார்.

அமர்வு- 2  2015 இல் தமிழ்க் கவிதைகள் தொடரும் போக்குகள்
“தமிழ்க்கவிதைகள் தொடரும் போக்குகள்” எனும் பொருளில் காலை 12.15 -1.15  வரை நடைபெறவுள்ள இரண்டாம்அமர்வில் தக்கலையைச் சார்ந்த படைப்பாளர் திறனாய்வாளர் ஹெச்.ஜி.ரசூல் கலந்துகொண்டு தமிழ்க்கவிதைகள் தொடரும் போக்குகள் என்ற தலைப்பிலும், கவிஞர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் ‘தமிழ்க்கவிதைகள் தனிப்போக்குகள்” எனும் தலைப்பிலும்  சிறப்புரையாற்றுகின்றனர். முனைவர் குரு.சண்முகநாதன் கருத்துரை வழங்குகிறார்.

அமர்வு-3 2015 இல் தமிழ் நாடகப்போக்குகள்
“தமிழ்நாடகப் போக்குகள்” எனும் பொருளில் காலை 2.15 -3.15  வரை நடைபெறவுள்ள மூன்றாம்அமர்வில் தூய சவேரியார் கல்லூரித் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் இரா.பிரான்சிஸ் சேவியர் தலைமையேற்க திருப்பத்தூர் பேராசிரியர் கி.பார்த்திபராஜா தமிழ்நாடகங்களின் போக்கு குறித்துச் சிறப்புரையாற்றுகிறார். பேராசிரியர் சி.ரமேஷ் கருத்துரை வழங்குகிறார்.

அமர்வு-4 2015 இல் தமிழ்த் திரைப்படப்போக்குகள்
2015 இல் தமிழ்த் திரைப்படப் போக்குகள் எனும் பொருளில் காலை 3 - 4.30  வரை நடைபெறவுள்ள மூன்றாம்அமர்வில் நாகர்கோவில் கல்லூரிப் பேராசிரியர் சி.கணேஷ் தலைமையுரையாற்றுகிறார்.தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் ஆட்சிக்குழு உறுப்பினரும் மேனாள் நாடகத்துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் மு.இராமசாமி  தமிழ்த் திரைப்படப் போக்குகள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

2015 இல் தமிழ்த் திரைப்படப் போக்குகள் எனும் பொருளில் காலை 3 - 4.30  வரை நடைபெறவுள்ள மூன்றாம்அமர்வில் நாகர்கோவில் கல்லூரிப் பேராசிரியர் சி.கணேஷ் தலைமையுரையாற்றுகிறார்.தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் ஆட்சிக்குழு உறுப்பினரும் மேனாள் நாடகத்துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் மு.இராமசாமி  தமிழ்த் திரைப்படப் போக்குகள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் திருநாவுக்கரசு கருத்துரை வழங்குகிறார்.

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் திருநாவுக்கரசு கருத்துரை வழங்குகிறார்.
 
இரண்டாம் நாள் கருத்தரங்க நிகழ்ச்சிகள் (31.1.2016)

அமர்வு- 1 “2015 ஆம் ஆண்டின் தமிழ்ச் சிற்றிதழ்ப் போக்குகள்’
 “2015 ஆம் ஆண்டின் தமிழ்ச் சிற்றிதழ்ப் போக்குகள்’ எனும் பொருளில் காலை 10 -11.20 வரை நடைபெறவுள்ள அமர்வில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் பா.வேலம்மாள் தலைமையுரையாற்றுகிறார். தமிழ்ச்சிற்றிதழ்ப் பொதுப்போக்குகள் எனும் பொருளில் சென்னையைச் சார்ந்த கவிஞரும் கலை இலக்கியத் திறனாய்வாளருமான முபீன் சாதிகாவும், சிற்றிதழ்த் தனிப்போக்குகள் என்ற பொருளில் வாணியம்பாடியைச் சார்ந்த கவிஞர் விமல்சண்முககுமாரும் சிறப்புரையாற்றுகின்றனர். மேலும் அமைப்பின் பொருளாளர் பேராசிரியர் நா.வேலம்மாள் கருத்துரையாற்றுகிறார்.

அமர்வு- 2  2015 இல் தமிழ்ச் சிறுகதைப் போக்குகள்

“2015 இல் தமிழ்ச் சிறுகதைப் போக்குகள்’ எனும் பொருளில் காலை 11.30 -12.15 வரை நடைபெறவுள்ள அமர்வில் திருநெல்வேலி சாராள் தக்கர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ஜெயரதி பொன்மலர் தலைமையுரையாற்றுகிறார். ஆந்திரமாநிலம் குப்பம் திராவிடப் பல்கலைக்கழகப் பேராசிரியர் விஷ்ணுகுமரன், தமிழ்ச் சிறுகதைப் பொதுப்போக்குகள்’ எனும் தலைப்பிலும் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் நிதா எழிலரசி, தமிழ்ச் சிறுகதைத் தனிப்போக்குகள் எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றுகின்றனர். சங்கரன்கோவில் பி.எம்.டி .கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் வ.ஹரிஹரன் கருத்துரை வழங்குகிறார்.

அமர்வு- 3 2015 இல் தமிழ் நாவல் போக்குகள்

2015 இல் தமிழ் நாவல் போக்குகள் எனும் பொருளில் காலை 12.15- 1.15 வரை நடைபெறவுள்ள அமர்வில் திருநெல்வேலி பேட்டை மதிதா இந்துக் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ஆ.செல்லப்பா தலைமையுரையாற்றுகிறார். நாகர்கோவில் பேராசிரியர் மற்றும் நாவலாசிரியர் குமார செல்வா, 2015 ஆம் ஆண்டின் தமிழ் நாவல் பொதுப் போக்குகள் எனும் தலைப்பிலும் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் திருநாவுக்கரசு தமிழ் நாவல் தனிப்போக்குகள் எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றுகின்றனர்.திருநெல்வேலி சாரதா மகளிர் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.பர்வதகிருஷ்ணம்மாள் கருத்துரை வழங்குகிறார்.

அமர்வு- 4 2015 இல் தமிழ்த் திறனாய்வுப் போக்குகள்
2015 இல் தமிழ்த் திறனாய்வுப் போக்குகள் எனும் பொருளில் பிற்பகல் 2.15 - 3.00 வரை நடைபெறவுள்ள அமர்வில் தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரிப் பேராசிரியர் கோ.புவனேஸ்வரி தலைமையுரையாற்றுகிறார். தமிழ்த்திறனாய்வுப் பொதுப்போக்குகள் எனும் தலைப்பில் பேராசிரியர் ஜே.ஆர்.வி.எட்வர்ட் சிறப்புரையாற்றுகிறார்.

நிறைவுவிழா

பிற்பகல் 3.00- 4.00 வரை நடைபெறவுள்ள நிறைவுவிழாவில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த்துறைத்தலைவர்  பேராசிரியர் சு.அழகேசன் தலைமையுரையாற்றுகிறார். “தொல்காப்பியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும்” எனும் தலைப்பில் சென்னை பேராசிரியர் துரை.சீனிச்சாமி கருத்தரங்க நிறைவுப் பேருரையாற்றுகிறார். மேலும் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் நன்றி கூறுகிறார். இக்கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர் பேராசிரியர் சிவசு (9443717804) அவர்களைச் செல்பேசியில் தொடர்புகொள்ளலாம்.



பேராசிரியர் சௌந்தர மகாதேவன்,செயலாளர்,மேலும்,திருநெல்வேலி



தமிழ்இலக்கியத்திறனாய்வாளர் பேராசிரியர் முனைவர் க.பஞ்சாங்கத்திற்கு மேலும் இலக்கிய விமர்சனவிருது



திருநெல்வேலி பேராசிரியர் சிவசுவின் மேலும் இலக்கியஅமைப்பு மற்றும் மேலும் வெளியீட்டகத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தமிழ்இலக்கியத் திறனாய்வுத்துறையில் சிறந்துவிளங்கும் தமிழ்இலக்கியத் திறனாய்வாளருக்கான மேலும் விருதினை வழங்கிவருகிறது.  
 
2013ல் இவ்விருது இலக்கியத் திறனாய்வாளர் சண்முகத்திற்கும், 2014 ல் இவ்விருது திறனாய்வாளர் ஜமாலனுக்கும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான மேலும் இலக்கியத்திறனாய்வாளர் விருது புதுச்சேரியைச் சார்ந்த தமிழ்இலக்கியத் திறனாய்வாளர் முனைவர் க.பஞ்சாங்கத்திற்கு மேலும் விருதுடன் ரூ 25000 பணமுடிப்பு 5.7.15 அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை எக்மோரில் உள்ள இக்க்ஷா மையத்தில் வழங்கப்படுகிறது.

 
முனைவர் க.பஞ்சாங்கம்,விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகிலுள்ள புத்தூரில் பிறந்தவர். சிலப்பதிகாரத் திறனாய்வுகள் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை நிகழ்த்தியவர்.திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பி.எம்.டி.கல்லூரியில் ஆசிரியப்பணியைத் தொடங்கி புதுவையில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிப் பணிநிறைவடைந்துள்ளார். 

ஓட்டுப்புல் எனும் கவிதைத்தொகுதி இவரின் முதல் நூல். சாகித்திய அகாதெமி அமைப்பின் உறுப்பினராக நான்காண்டுகள் செயல்பட்டுள்ளார். தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு,நவீனக் கவிதையியல்: எடுத்துரைப்பியல், தொன்மத்திறனாய்வு, மனோன்மணியமும் பின்காலனித்துவமும், மறுவாசிப்பில் கி.ரா.போன்ற குறிப்பிடத்தக்க நூல்களைத் தமிழுக்குத் தந்தவர். புதிய கோட்பாட்டு நோக்கில் சங்கஇலக்கியம் இவர் எழுதிய முப்பத்துமூன்றாம் நூல்.
 
விருது வழங்கும் விழா

இந்த ஆண்டுக்கான மேலும் இலக்கியத்திறனாய்வாளர் விருது புதுச்சேரியைச் சார்ந்த தமிழ்இலக்கியத் திறனாய்வாளர் முனைவர் க.பஞ்சாங்கத்திற்கு 5.7.15 அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை எக்மோரில் உள்ள இக்க்ஷா மையத்தில் வழங்கப்படுகிறது. பேராசிரியர் மேலும் சிவசுவின் அறிமுகத்தோடு நிகழ்ச்சி தொடங்கும்.பேராசிரியர் தமிழவன் முதன்மை உரைநிகழ்ச்சியின் நெறியாளராக உரையாற்றுகிறார். துறைபொருள் வெளி எனும் தலைப்பில் நாகார்ஜூனன் உரையாற்றுகிறார்.எஸ்.சண்முகம்,மூபின் சாதிகா,நடராஜன்,கணேஷ்ராம்,பார்த்திபராஜா,வெளி.ரங்கராஜன்,திருநாவுக்கரசு, மனோ.மோகன் ஆகியோர் எதிர்வினையாற்றுகிறார்கள்.
விருது வழங்கும் நிகழ்ச்சியின் நெறியாளராக ஆர்.சிவக்குமார் பங்கேற்கிறார்.
 
சிவசு விருதுத் தேர்வுரையாற்றுகிறார்.இன்றைய கல்விச்சூழலும் நவீன இலக்கியமும் என்ற தலைப்பில் ரா.ஜெயராமனும், விமர்சகர் க.பஞ்சுவின் படைப்புகள் என்ற தலைப்பில் பாரதிபுத்திரனும், சண்முக.விமல்குமார் என்கிற இளம் இலக்கிய ஆளுமை அறிமுகம் எனும் தலைப்பில்  சௌந்தர மகாதேவனும் உரையாற்றுகின்றனர். 

மேலும் இலக்கியத்திறனாய்வாளர் விருதினை முனைவர் க.பஞ்சாங்கத்திற்கும்,இளம் இலக்கிய ஆளுமை விருதினை சண்முக.விமல்குமாருக்கும் மேலும் இலக்கிய அமைப்பு வழங்குகிறது. இருவரின் ஏற்புரையோடு விழா நிறைவடைகிறது.இத்தகவலை மேலும் அமைப்பின் நிறுவனர் சிவசு,அமைப்பின் செயலாளர் சௌந்தர மகாதேவன் ஆகியோர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளனர்.









                          முனைவர் சௌந்தர மகாதேவன்

பாபநாசத்தில் மேலும் அமைப்பு நடத்திய கணினித் தமிழ் பயிலரங்கு




பாபாநாசம் கல்லூரியின் குளிரூட்டப்பட்ட அறையில் அற்புதமாய் கணினித்தமிழ்க் கருத்தரங்கு 29.6.2015 அன்று காலை பத்துமுப்பதுக்குத் தொடங்கியது. எப்போதும் அழகாய் தயாரித்து உரையாற்றும் கல்லூரிமுதல்வர் முனைவர் அழகப்பன் தலைமையுரையாற்றினார்.தமிழ்த்துறைத்தலைவர் சிவசங்கரனின் வரவேற்புரை எளிமையாக இருந்தது.கணினித்துறையின் அண்மைக்காலப் போக்குகளைத் தமிழ்ப்பின்னணியை மையமிட்டுச் சிறு வாழ்த்துரை வழங்கினேன்.

பேராசிரியர் சிவசு வழக்கம்போல் ஆழமான கருத்துகளோடு மிகஇயல்பாக அறிமுகவுரையாற்றினார். பேராசிரியர் தெய்வசுந்தரம் முகநூல் நண்பராக அறிமுகமானவர் என்பதால் வெகுஇயல்பாகப் பேச்சைத்தொடங்கிச் சுலபமாய் நட்புக்கொள்ளமுடிந்தது.

சக நண்பர்கள் சங்கரவீரபத்திரன், ஹரிஹரன், அசின் தங்கராஜ் ஆகியோர் நிகழ்வை உயிர்த்துடிப்பாக்கினர். பேராசிரியர் தெய்வசுந்தரம் மொழியியலோடு கணினியியலையும் தமிழியலையும் இணைத்து பத்தாண்டுகள் ஆய்வுநிகழ்த்தி மிகப்பெரிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறார் என்பது அவர் சிறப்புரை நிகழ்த்தியபோது தெளிவாகப்புரிந்தது.

இணைய உலகில் தமிழ்சிகரம்தொட்டிருக்கும் இந்த வேளையிலும்கூட எம்.எஸ்.போன்ற நிறுவனங்கள் எளிதாய் சந்தைப்படுத்த முடியும் மொழிகளை மட்டுமே கண்டுகொண்டிருக்கிறது என்பதும்,பெருகணினி மென்பொருள் நிறுவனங்களால் கண்டுகொள்ளப்படாத மொழியாகத் தமிழ் திகழ்வதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

இந்தச் சோகமயமான சூழ்நிலையில் பலபல்கலைக்கழகங்கள் இணைந்து ஆற்றவேண்டிய பெரும்பணியை பேராசிரியர் தெய்வசுந்தரம் ஆறுமென்பொறியாளர்களைக்கொண்டு சாதித்துக் காட்டியிருப்பதை அவர் காட்டிய செயல்விளக்கத்திலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.பேசியதை அப்படியே தட்டச்சு செய்துதரும் மொழித்தொழில்நுட்பம் வந்தபின்னரும்கூடத் தமிழுக்கு முறையான பிழைதிருத்தி வராதுபோனது துயரமானநிகழ்வே.நாற்பதாயிரம் சொற்களுக்கு மேல்சேகரித்து மின்அகராதியைத் தந்திருக்கிறார்.ஏதேனும் புதியசொற்கள் நாளிதழ்களில் வந்தால் அவற்றை அகராதியில் சேர்க்கவும் அவரது மின்தமிழ் மென்பொருளில் வழியமைத்துத்தந்துள்ளார்.

எளிதாய் சந்திப்பிழைகளை நீக்கவும் ஏன் குறித்த இடத்தில் அந்த எழுத்திற்குப்பின் ஒற்றுமிகுகிறது என்பதற்கான விளக்கத்தை அவர் உருவாக்கியுள்ள மென்பொருள் அழகாக விளக்குகிறது. பேச்சுவழக்கில் நாம் ஆங்கிலம் கலந்துபேசுவதைத் தவிர்க்க அம்மென்பொருளே அதை அழகாகத் தமிழ்ப்படுத்தித் தருகிறது.

ஒரு சொல்லைத்தந்தால் அதன் வேர்ச்சொல்,அது எவ்வகைப் பெயர்,அதன் இலக்கணக்குறிப்பு ஆகியவற்றைத் தருகிறது. 49 வினாடியில் அவர் உருவாக்கிய மின்தமிழ் 400 சொற்களை ஆராய்ந்து அதில் உள்ள பிழைகளைப் பட்டியலிடுகிறது. ஆய்வுமாணவர்களுக்கு உதவும் கருவிகளையும் அவர் தந்துள்ளார். அகரவரிசைப்படி எழுதவும், எம்எல்ஏ.அமைப்பில் ஆய்வேடு அமையவும் அவர் மென்பொருள் உதவுகிறது.

சத்தமின்றி சாதனை செய்துவிட்டு சகதமிழ் அறிஞர்களை முகநூலில் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்கள் உண்மையில் தெய்வீக சுந்தரம்தான். பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களைப் பாராட்டி சிறந்தமென்பொருள் அறிஞருக்கான விருதினைத் தமிழக முதல்வர் அவர்கள் வழங்கவிருக்கிறார்கள்.அவருக்கு மேலும் சார்பில் இனிய நல்வாழ்த்துகள்.
*
சௌந்தர மகாதேவன்

மேலும் இலக்கிய அமைப்பின் சார்பில் பாளையில். வண்ணதாசன் சிறுகதைஇலக்கிய விழா மற்றும் வண்ணதாசன் நூல் வெளியீட்டுவிழா




எழுத்தாளர் வண்ணதாசனின் சிறுகதைகள் குறித்த “வண்ணதாசன் கதைகள் வாசிக்கலாம் வாங்க” எனும் இலக்கிய நிகழ்ச்சியும் “வண்ணதாசன்” நூல் வெளியீட்டு விழாவும் மேலும் இலக்கிய அமைப்பின் சார்பில் பாளை.தூய சவேரியார் கல்லூரியில் 22.8.2015 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
 
மேலும் அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் மேலும் சிவசு விழாவுக்குத் தலைமை தாங்கித் தொடக்கவுரை ஆற்றினார். மேலும் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் வரவேற்றுப் பேசினார்.

வண்ணதாசன் நூல் வெளியீடு

பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் எழுதி, மலேசியாவில் உள்ள மலேயாப் பல்கலைக்கழகம்,சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்னை கலைஞன் பதிப்பகம் இணைந்து பதிப்பித்துள்ள வண்ணதாசன் வாழ்க்கை வரலாறு,வண்ணதாசன் சிறுகதைகள் குறித்த அறிமுகம், வண்ணதாசன் நேர்காணல் ஆகியவற்றை உள்ளடக்கிய  “வண்ணதாசன்” என்கிற நூலை பேராசிரியர் மேலும் சிவசு வெளியிட எழுத்தாளர் வண்ணதாசன் அதன் முதல்பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

சிறுகதைகள் வாசிப்பு நிகழ்ச்சி

வண்ணதாசன் எழுதியுள்ள 165 சிறுகதைகளிலிருந்து ஆறு கதைகள் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 

பேராசிரியர் மேலும் சிவசு வண்ணதாசன் எழுதிய “சுவர்” கதையையும்,எழுத்தாளர் நாறும்பூநாதன் “ நிலை” கதையையும், பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் “கூறல்” கதையையும், திருநெல்வேலி அகிலஇந்திய வானொலியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்தி “அப்பாவைக் கொன்றவன்” எனும் கதையையும்,முனைவர் பட்ட ஆய்வாளர் ரமேஷ் “தோட்டதிற்கு வெளியிலும் சிலபூக்கள்” எனும் சிறுகதையையும் திறனாய்வு செய்தனர்.


வண்ணதாசன் ஏற்புரை

நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய எழுத்தாளர் வண்ணதாசன், “ ஒரு படைப்பாளி எத்தனை மனிதர்களைச் சென்றடைகிறானோ அத்தனைப் படைப்புகளுக்கான தூண்டுதலைப் பெறுகிறான். என் பிறந்தநாளில் என் வாசகர்கள் முன் என் கதைகள் பேசப்படுவது மகிழ்வான நிகழ்வுதான். வாழ்வின் அபூர்வ கணங்களை என் வாசகர்கள் வழியே ஐம்பத்து மூன்று ஆண்டுகளாக அடைதல் எவ்வளவு அழகானது. எழுதிவனுக்கு தான்எழுதிய எந்தக் கதைதான் பிடிக்காமல் போகும்? 

 ஆனால் முன்னால் பயணிப்பதை விட்டுவிட்டு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய கதைகளை அப்படைப்பாளி இன்று திரும்பிப் பார்ப்பது வலிநிறைந்தது. 

அப்படித் திரும்பிப் பார்க்கும்போது கழுத்துமட்டுமா என் மனமும் வலிக்குமே.! எழுத்தாளர் சுஜாதா பேசுகிற இடங்களில் எல்லாம் “நிலை” கதையைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்.

 “நிலை” கதையில் பத்துவயதுச் சிறுமியாக, நெல்லையப்பர் தேர்பார்க்கக் கிளம்பிய சிறுமி கோமுவை என் அறுபத்து ஏழுவயதில் மூண்றாண்டுகளுக்கு முன் சந்தித்தேன். தன் பேத்தியோடு அவள் என்னிடம் வந்து “ நல்லா இருக்கியளா அய்யா” என்று பேசினாள்.அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி படைப்பாளிக்கு இருந்துவிடமுடியும்? 

என் கதைகளில் வரும் பாத்திரங்கள் யாவும் என்னோடு பயணித்த சகபயணிகள்,என் தெருசார்ந்தவர்கள், என் தோளைத் தொட்டவர்கள், என்னை ஆதரித்தவர்கள். நான் கருணையின் பாடலைப் பாடியபடிக் குதித்துக் குதித்துச் செல்லும் கடிகாரத்தின் நொடிமுள்ளாய் என்னை உணர்கிறேன். நெல்லை நகரம் மாறிவிட்டது, காரைவீடுகள் காணாமல்போய்விட்டன, பழுப்படைந்த சுவர்கள் காணாமல் போய்விட்டன. வெள்ளையடிப்புக்கு முந்தையநாளின் சுண்ணாம்பு நீத்தும் சடங்குகள் காணாமல் போய்விட்டன. பழைமையின் அடையாளமாய் திகழ்ந்த பரண்கள் காணாமல் போய்விட்டன, வெள்ளையடிப்புக்கு ஒதுங்கவைக்கும்போது கண்விழிக்காத மெல்லியதோல் உள்ள சின்னஞ்சிறு எலிக்குஞ்சுகள் காணாமல் போய்விட்டன.

 எனக்கு எல்லாக் கவிதைகளின் கடைசிவரிகளைப் போல் என் சிறுகதைகளின் கடைசிவரிகளும் முக்கியம். என் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானகதை, “கூறல்” கதை. தொடுதலே ஒரு உரையாடல். முதியவர்கள் தொடுதலுக்கு ஏங்குகிறார்கள்.

 ஆனால் மறுக்கப்படுகிறார்கள்,பிறரால் ஒதுக்கப்படுகிறார்கள். வெயிலிலும் மழையிலும்  காலம் காலமாய் உழைத்துக் கைகளில் தோல்சுருக்கத்தோடு தொடுதலுக்கு ஏங்கிக்கொண்டிருக்கின்றனர் இன்னும்.அப்பாவைக் கொன்றவன் சாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் உள்ளத்தின் கதை.”தோட்டத்திற்கு வெளியிலும் சிலபூக்கள் கதை” கைக்குழந்தையோடு பேருந்தில் பயணிக்கும் ஒருவனுடைய குழந்தை அழும்போது உடன் பயணிக்கும் சகபயணியான பெரியவர், அக்குழந்தையை தூக்கி அதன் அழுகையை நிறுத்தி, “என் அம்மையில்லா” என்று சொன்னதைக் கருணையோடு சொன்ன கதை. இந்த  எழுபதாவது வயதில்  அந்த ஒருவயது பெண்குழந்தையை என் மடியில்வைத்து என் அம்மையில்லா என்று நான் சொல்லுமளவு கனிந்துவிட்டேன்.கதை எழுதுகிறவனை இப்படி நுட்பமாகக் காலம் நிறுத்தி அழகுபார்க்கிறது.” என்று பேசினார். வண்ணதாசனின் வாசகர்கள் சார்பில் அவருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ரமேஷ் நன்றி கூறினார்.


படத்தில்: மேலும் இலக்கிய அமைப்பு நடத்திய வண்ணதாசன் கதைகள் வாசித்தல் தொடர்பான இலக்கிய விழாவில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் எழுதியுள்ள “ வண்ணதாசன்” எனும் நூலை பேராசிரியர் மேலும் சிவசு வெளியிட வண்ணதாசன் பெற்றுக்கொள்கிறார்.அருகில் எழுத்தாளர் நாறும்பூநாதன்.
                                      முனைவர் சௌந்தர மகாதேவன்
                                        செயலாளர்,மேலும் அமைப்பு