பாளையில் “மேலும்” இலக்கிய அமைப்பின் சார்பில்
தி.க.சி நினைவுப் பகிர்தல் நிகழ்ச்சி பாளை.சைவசபையில் 27.4.14 அன்று மாலை 6
மணிக்கு நடைபெற்றது.
பேராசிரியர் “மேலும்”சிவசு நிகழ்ச்சிக்குத் தலைமையுரை
ஆற்றினார்.
சௌந்தரமகாதேவன் வரவேற்றுப் பேசினார்
.’’தி.க.சியும்
தமிழ்த்திறனாய்வும்”எனும் தலைப்பில் முனைவர் வே.கட்டளை கைலாசமும்,’’பேரன்பாளர்
தி.க.சி”எனும் தலைப்பில் ஓவியர் வள்ளிநாயகமும்,”ஆய்வாளர் நோக்கில் தி.க.சி”எனும்
தலைப்பில் முனைவர் ச.மகாதேவனும்,”தி.க.சியும் சிற்றிதழ்களும்”எனும் தலைப்பில்
பேராசிரியர் சிவசுவும் சிறப்புரையாற்றினர்
“தி.க.சி.என்கிற சாகித்திய அகாடெமி
விருது பெற்ற படைப்பாளர் வேறுபாடு இல்லாமல் அனைவரிடமும் இயல்பாகப்
பழகினார்.தமிழகத்தின் இன்றைய முன்னணி எழுத்தாளர்கள் அவரால் அடையாளம்
காணப்பட்டவர்கள்.1952 ஆம் ஆண்டு முதல் நெல்லையில் பதிப்பகம் நடத்தி பத்து ஆண்டுகள்
உலகஇலக்கியங்களை திருநெல்வேலி வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.ஜீவாவுடன்
வல்லிக்கண்ணனுடன் ,தொமுசி உடன் வெகு நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்.”என்று
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன்
சிறப்புரையாற்றினார்.
“தி.க.சி. புதுமைப்பித்தன் மீது கொண்டிருந்த
அன்பு அளவிடற்கரியது,ஆனால் அவருக்கு வீரவணக்கம் செய்யாதீர் என்று எழுதியதன் காரணம்
புரியவில்லை.தி.க.சி.ஒரு மிதக்கும் குறியாகத்
திகழ்ந்தார்.தமிழியம்,தலித்தியம்,பெண்ணியம்,சூழலியம், ஆகியவற்றோடு அவர்
தமிழ்த்தேசியமும் பேசினார்,ஈழப்பிரச்சினை அவரை வெகுவாகப் பாதித்தது.வெகு தீவிரமாக
எதிர்வினை ஆற்றினார்.தாமரை இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபோது பலஎழுத்தாளர்களை
அவர் உருவாக்கினார்,ஆனால் ஒரு காலகட்டத்தில் தாமரை இதழில் இருந்து
விலகினாரா?அல்லது விலக்கப்பட்டாரா? என்ற கேள்வி இன்று வரைப் புதிராவே உள்ளது.தன்
மகன் வண்ணதாசன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாளியாக இருந்தபோதும் அவரது படைப்புலகம்
குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்?என்ற பல கேள்விகள் காலத்தின் முன்
நிற்கின்றன..ஆனால் பதில் சொல்வதற்கு இன்று அவர் உயிருடன் இல்லை”என்று பேராசிரியர்
சிவசு சிறப்புரையாற்றினார்.
.”தொடக்கத்தில் தி.க.சி.யின் பஞ்சசீலக்கொள்கை
என்று ஒன்று இல்லை,இலங்கைப் படுகொலைக்குப் பின் அவர் தமிழ்த்தேசியம் என்ற ஒன்றைத்
தன் பஞ்சசீலக் கொள்கையில் இடம்தந்து இறுதிவரைத் தீவிரமாய் போராடினார்.” என்று
ம.தி.தா.இந்துக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வே.கட்டளை
கைலாசம் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக முனைவர் பட்ட ஆய்வாளர் ரமேஷ் கிராமிய இசை வழங்கினார்.தேசியப்
பாவலர் த.மு.சா.காஜாமைதீன் இரங்கல் கவிதை வாசித்தார்.விழாவில் மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் பேராசிரியர் அ.ராமசாமி,முனைவர்
மாணிக்கம்,எழுத்தாளர் க்ருஷி,ஆகியோர் பங்கேற்றனர்.
படத்தில்: பாளையில் “மேலும்” இலக்கிய அமைப்பின்
சார்பில் தி.க.சி நினைவுப் பகிர்தல் கருத்தரங்கில் பேராசிரியர் சிவசு
பேசுகிறார்.அருகில் முனைவர் ச.மகாதேவன்,பேராசிரியர் கட்டளை கைலாசம் ஆகியோர்.
செய்தி..முனைவர்.ச.மகாதேவன்
No comments:
Post a Comment