25
ஓக
வந்த பார்சலைப் பிரித்தேன். உள்ளே அழைப்பிதழ், ஒரு நாவல் மற்றும் நான்கு பக்கக் குறிப்புரை இருந்தன. நெல்லை பேரா.சிவசு அவர்கள் அனுப்பியிருந்தார். முன்னதாகவே அலைபேசியில் விபரங்களைத் தெரிவித்திருந்தார். பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் ஆகஸ்ட் 18, 2013 ஞாயிறன்று நாவல் வாசிப்பு பயிற்சிப் பட்டறை. வருவதற்கு முன் இந்நாவலைப் படித்து வர வேண்டும். இது அவரின் அன்புக் கட்டளை.
நாவல்: தமிழவன் எழுதிய ‘முஸல்பனி’
முதல் பதிப்பு: 2012
வெளியீடு: அடையாளம் (04332 – 273444)
தமிழகம் முழுவதும் ‘ஆசிரியர் தகுதித் தேர்வு’ நடைபெறும் நாள். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு போல ஆறரை லட்சம் பேர் எழுதுவதாக செய்தித்தாளில் படித்த ஞாபகம். பேருந்தில் பெருங்கூட்டமாக இருக்குமே என்று நினைத்துக் கொண்டிருக்கையில் பேராசிரியரிடமிருந்து அலைபேசி அழைப்பு.
“நெல்லை வந்திடுங்க; நம்ம காரிலேயே போயிடலாம்” என்றார்.
மனம் தந்தி அடித்ததோ? என்னுள் எழுந்த வியப்போடு “சரி” என்றேன்.
நிகழ்வன்று அதிகாலையிலேயே கிளம்பி பேராசிரியர் சொன்னபடி நெல்லையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் அவரின் வர்சா கார் வந்தது. காரில் பேராசிரியருடன் விமர்சகர் ஜமாலன், ஆந்திர திருநாவுக்கரசு, கவிஞர் நிதாஎழிலரசி. இவர்களுடன் நானும். ஒன்பது மணிக்கு அம்பையில் காலை உணவை முடித்து விட்டு, அடுத்த அரைமணி நேரத்தில் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தோம்.
தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் மட்டுமின்றி பிறதுறைப் பேராசிரியர்களும் ஆர்வத்துடன் அவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வதில் மும்முரமாக இருந்தனர். தமிழ் வளர்த்த பொதிகையைப் படித்ததுண்டு. அப்போதுதான் நேரில் பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் பெயர் பதிவு தொடங்கியது. பங்கேற்பாளர்களாக தென் தமிழகப் பல்கலைக் கழக மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் படைப்பாளிளும் இலக்கிய ஆர்வலர்களும் வந்திருந்தனர்.
பத்து மணிக்கு தொடக்க விழா அரங்கேறியது. வரவேற்புரையைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் சி. அழகப்பன் தலைமையுரை ஆற்றினார். “வாசிப்புப் பழக்கம் இன்றைய மாணவர்களிடையே மிகக் குறைந்து விட்டது. சற்று முன் இங்குள்ள சில மாணவிகளிடம் நீங்கள் படித்த ஏதாவது ஒரு நாவலைக் கூறுங்கள் என்று கேட்டேன். அதற்கு யாரும் பதில் சொல்ல வில்லை. ஒரு மாணவி மட்டும் முல்லா கதைகள் படித்ததாகக் கூறினார். இது தான் இன்றைய இளையோரின் வாசிப்பு நிலை. இந்நிலை மாற உங்கள் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும். அதுதான் அறிவைப் பெருக்கும். மேலும், நம் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டத்தான் இம்மாதிரிப் பயிற்சிப் பட்டறைகள். இதை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
பேரா.சிவசு அவர்கள் பயிற்சிப் பட்டறையை நடத்த
வந்தார். பங்கேற்பாளர்களுக்கும் கருத்துரையாளர்களுக்குமான இடைவெளியை அகற்ற
மேடையை விட்டு கீழே இறங்கி, அனைவரும் ஒரே தளத்தில் ஒரு முகமாய் பார்த்துப்
பேசும் வகையில் வட்ட வடிவ அமர்வாக மாற்றியமைத்தார். சுய அறிமுகத்தோடு
பட்டறை தொடங்கியது.
‘முஸல்பனி’ என்ற தலைப்பு எதைக் காட்டுகிறது?
என்று பேரா.சிவசு கேட்டார். அரங்கம் அமைதியானது. ஒருவர், “அது இளவரசியின்
பெயர்” என்றார். பேராசிரியரோ, “முஸல் என்பது முயல். முயல் முல்லை நில
விலங்கு. பனி பாலைக் குரியது. இந்தத் தலைப்பில் Space and Time இருக்கிறது.
அதாவது இடமும் காலமும் தெரிகின்றன. இந்நூல் அவை சார்ந்தவையா என்று நாம்
கவனிக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து நாவலின் முதல் அத்தியாயம் வாசிக்கப் பட்டது. புரிதலைப்
பகிரும் படிக் கேட்டுக் கொண்ட போது, பலரும் புரியவில்லை என்றே கூறினர்.
ஒருவர் ராம கதையுடன் ஒத்துப் போவதாகவும், இன்னொருவர் பக்தி இலக்கியத்துடன்
ஒத்துப் போவதாகவும் கூறினர். இப்படி கூறப்பட்ட கருத்துக்களும்
வெவ்வேறானவையாக இருந்தன. இன்னும் அநேகர் நடப்பதை அமைதியாகப் பார்த்துக்
கொண்டிருந்தனர்.தீராநதி விமர்சகர் ஜமாலன் எழுந்து, “மல்டி மீடியா வந்த பின்பு அனைவரும் கேட்பதையும் பார்ப்பதையுமே விரும்புகின்றனர். அத்தொழில் நுட்பம் எளிதாகச் சென்றடைவதால் புத்தகம் எடுப்பதைத் தவிர்க்கின்றனர். வாசிப்பு என்பது ஒரு கலை. நாவல் வாசிப்பிலிருந்து நம் வாசிப்புப் பழக்கத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். புத்தகம் வாங்குவது செயல் அல்ல; அது முதலீடு. இன்று எதிலும் துரிதம், துரிதம், துரிதம்! படிப்பதிலும் துரிதமாகப் படித்து துரிதமாகச் சலிப்படைந்து விடுகிறார்கள். மறைமுக அறிவு என்பதே இல்லை. அது நம்மை நிதானமாக வாசிக்கக் கற்றுக் கொடுக்கிறது. Reader and text என்பது மாறி இன்று Writer and text என்ற நிலை வந்துள்ளது. அந்த வகையிலே இந்த நாவல் படிமங்களையும், புது உத்திகளையும் கொண்டிருப்பதை நாவலாசிரியர் முன்னுரையிலேயே தெரிவிக்கிறார். இது நம்மை நிதான வாசிப்பிற்கு அழைத்துச் செல்கிறது.
இப்போது வாசித்த பகுதியில் வருகிற அத்திரிகப்பா என்ற பெயர் ஓர் அர்த்தமற்ற சொல். தமிழக நாட்டுப்புறக் கதையொன்றில், அத்திரிப்பாச்சா என்ற அர்த்தமற்ற சொல்லை கொளக்கட்டை என்று நினைத்து மனைவியைத் துன்புறுத்திய ஒரு கணவனின் கதை உண்டு. அதைப் போலவே அர்த்தமற்ற ஒரு சொல்லாக அத்திரிகப்பா பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், அதையே அடுத்தடுத்த இயல்களில் படிக்கும் போது அத்திரிகப்பா சொல், பயனற்ற இக்கால அரசியல்வாதியைக் குறிக்கலாம். தமிழவன் எழுதிய, ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ முதலான ஐந்து நாவல்களும் அந்தந்த பத்தாண்டுகளில் உள்ள பிரச்சினைகளை உள்வாங்கி எழுந்தவையாகவே இருக்கின்றன” என்றார்.
சிவசு அவர்கள், “வாசிப்பு முறை எவ்வாறு காலந்தோறும் மாறுபடுகிறதோ அதற்கேற்ப, இன்று நாம் எப்படி வாசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். காப்பியங்கள் படித்துக் கொண்டிருந்த நாம் ஆற்றுப்படை போன்ற நூல்கள் எழும்போது, அதற்கேற்ப நம் வாசிப்பு முறையை மாற்றிக் கொண்டோம். அதுபோல இன்று வழக்கமான நூல்களையும், பாடத்திட்ட நூல்களையும் தாண்டி புதிய சூழலுக்கு வந்துள்ளோம். மேலும், வெளிப்படையாக எழுதப்படும் படைப்புகள் எப்போதும் ஒரு பொருளைத் தருவன. அவை ஒரு காலத்தை மட்டுமே நிர்ணயித்துப் பேசுவன. ஆனால், இது போன்ற படைப்புகள் நம்மை வெவ்வேறு தளத்திற்கு அழைத்துச் செல்கின்றன” என்றார்.
பெங்களூர் ரயில் மூன்று மணி நேரம் தாமதமாக வந்ததால், பிற்பகல் இறுதி அமர்வில் வந்து சேர்ந்தார் தமிழவன். பகலில் பல்வேறு வினாக்களை எழுப்பியவர்கள் அவற்றை தமிழவன் முன்னிலையில் கேட்டார்கள்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேரா. ரவிக்குமார் அவர்கள், “நாடு தழுவிய ஒரு பிரச்சினை இருக்கும் போது அப்பிரச்சினை குறித்துப் பேச, எழுத தடை இருக்கலாம். அச்சூழலில் பூடகமாக அவ்விசயத்தைக் கூற வேண்டிய அவசியம் படைப்பாளிக்கு இருக்கும். ஆனால், அப்படியொரு நிலை இல்லாத இக்கால கட்டத்தில் ஏன் இப்படியொரு நாவல் எழுத வேண்டும்” என்றவர் தொடர்ந்து, “எந்த ஒரு படைப்பிலக்கிய மாகட்டும். சாதாரணமாக, ஒரு திரை இசைப் பாடலாக இருந்தாலும் சரி; அதிலுள்ள இசையாக இருந்தாலும் சரி. அதில் எல்லாவற்றையும் இணைக்கும் ஓர் ஒத்திசைவு இருக்கும். அப்படி ஏதும் இதில் இல்லையே ஏன்?” என்றும் கேட்டார்.
கல்லூரி மாணவி ஒருவர், “நாவலிலுள்ள ஒவ்வொரு பகுதியும் தனித்தனித் தலைப்புகளாக உள்ளன. ஒரு தலைப்பிற்கும் அடுத்த தலைப்பிற்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவில்லை. இப்படியிருக்கும் போது இதை நாவல் என்பதை விட சிறுகதைகள் என்று எடுத்துக் கொள்ளலாமா?” என்றார்.
இறுதியாகத் தமிழவன் அவர்கள், பின்வரும்
கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். கர்நாடக அரசு இலக்கியத்திற்கு ஒவ்வொரு
ஆண்டும் அதிகமான பணத்தை செலவிடுகிறது. அதுபோல கேரளாவில் எழுத்து எவ்வளவோ
மாற்றங்களை அடைந்து வருகிறது. ஆனால், நாம் அந்த அளவிற்கு எட்டவில்லை.
தமிழகத்தில் ஆயிரம் பக்க நாவல்கள் வரத் தொடங்கியுள்ள இந்நாட்களில்,
கேரளத்தில் ஐம்பது பக்க அளவிலான மைக்ரோ நாவல்கள் எழத் தொடங்கியுள்ளன.
ஆயிரம் பக்கங்கள் பேசுகின்ற செய்திகளை ஐம்பது பக்கங்கள் கூறுகின்றன. இது
அங்கு பிரபலமாகி வருகிறது. லச்சக்கணக்கான பிரதிகள் விற்பனை ஆகின்றன.
அங்குள்ள மக்கள் அதை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிப் படிக்கிறார்கள். நான்
அதைப் படித்த போது எனக்கு ரொம்ப ஆச்சரியம். தமிழிலும் இந்த மாதிரி வர
வேண்டும் என்று விரும்பினேன். அதன் விழைவே இந்நாவல். இது இக்காலச்
சூழல்களைக் கொண்டதே. நிகழ்வுகள் படிமங்களாக இருக்கின்றன. தனித்தனி
தலைப்புகளாக இருந்தாலும் அனைத்திற்குமான ஒத்திசைவு உள்ளே இருக்கிறது என்று
பதிலுரைத்தார்.
நானும் இந்த நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்திருந்தேன். முதல்
வாசிப்பில் முன்னுரை புரிந்த அளவுக்கு நாவல் உள்ளடக்கம் எனக்கும்
புரியவில்லைதான். இருந்தாலும் கூர்ந்து கவனித்ததில், ஆங்காங்கே தமிழ் மொழி,
இலக்கணம், தமிழர் பிரச்சினை போன்றவற்றைத் தொடுவது போலத் தெரிந்தது.பேரா. ரவிக்குமார் வினவிய வினா எனக்குள்ளும் இருந்தது. பாரதி பாஞ்சாலி சபதம் பாடிய போது இருந்த இறுக்கமான சூழல் போன்று இப்போதில்லையே. பிறகெதற்கு இப்பூடகம்? இதன் வழியாக நாவலாசிரியரின் கருத்தோ, சொல்லோ, எடுத்துரைக்கும் நயமோ எதிலும் நமக்குத் தெளிவு பெற முடியவில்லை. ஒரு படைப்பு வாசகனை யோசிக்க வைக்கலாம். ஆனால், எரிச்சலூட்டக் கூடாது. அப்படி நேரும் பட்சத்தில் அதை வாசிக்க வேண்டிய கட்டாயம் வாசகனுக்கு இருக்காது.
நாவலின் முன்னுரையிலிருந்து சில வரிகளை இங்கு எடுத்து வைக்கிறேன்:
“இந்த நாவல் பன்முகத் தன்மைகளைக் கொண்டு புது வகையில் அமைந்திருக்கிறது. அதாவது இதற்குத் தமிழில் முன் மாதிரி இல்லை.”
“இப்படைப்பில் தமிழ்ப் படிமங்களும் தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளும் நினைவுகளும் பண்பாடும் அவர்களின் நூல்களும் நாட்டுப்புறவியலும் உள்மனமும் புராணங்களும் உரைநடையாக எழுத்தாக்கப்பட்டிருக்கின்றன.”
“இதுபோல் ஒரு குறிப்பிட்ட உலக இலக்கிய மரபு பல எழுத்தாளர்களால் சமீபத்தில் உருவாக்கி வருகிறது. ஜேம்ஸ் ஜாய்ஸ், போர்ஹஸ், இட்டாலொ கால்வினோ, மிலராட் பாவிச் மற்றும் பல விஞ்ஞானக் கதைகளை எழுதுபவர்கள் இந்த மரபின் சில இழைகளைக் கையாள்கிறார்கள்.”
“இரண்டு வரிகளில் எழுதியதையும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டுக் காதை காதையாக நீளக்கதையை மூன்று காண்டங்களில் எழுதியதையும் தமிழன் அறிந்து அங்கீகரித்துள்ளான்.”
“இந்த நாவலின் இன்னொரு தன்மையாகக் காட்சிகள் வழியே கதையாடல் அடுக்கு அடுக்காகக் கட்டப்படுவதைக் கூற வேண்டும். ஓர் அத்தியாயத்திற்கும் அடுத்த அத்தியாயத்திற்கும் தொடர்பு இருக்கவும் செய்கிறது; தொடர்பு இல்லாமலும் உள்ளது.”
“சீட்டுக்கட்டுப் புனைவுத் தொடர் இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு காட்சியும் வெவ்வேறு தர்க்கத்திலிருந்து வளர்க்கப்படுகிறது. உள்ளே ஏதும் இல்லை. ஏன், உள் என்பதே இல்லையே!”
மேலுள்ள குறிப்புகள் ஒரு சில தான். இதற்குள்ளேயே சில முரண்கள் இருப்பதைக் காணலாம். ஒரு நல்ல நாவலுக்கு எந்த ஒரு முன்னுரையும் தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால், முன்னுரை வாசகனின் சுய சிந்தனையை சிறைப்படுத்திவிடும் என்பதே என் எண்ணம். 102 பக்கங்கள் கொண்ட இந்த நாவலுக்கு எட்டுப் பக்க முன்னுரை!
முல்லா கதை மட்டுமே தெரிந்திருக்கும், இல்ல, அதுவும் தெரியாமலிருக்கும் இன்றைய இளையோருக்கு, இந்நாவல் அறிமுகம் அவர்களின் வாசிப்பை அச்சுறுத்துமே அன்றி ஆர்வமூட்டாது.
ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டுமென்ற இயல்புகளைக் குறித்து பேரா.எஸ்.வையாபுரிப்பிள்ளை கூறும் போது, “தெளிவின்றி எங்கும் கருகலாய், எவ்வளவு முயன்றாலும் ஐயப்பாட்டின் நீங்காததாய் உள்ள செய்யுட்கள் நாம் கற்று இன்புறுதற்குரிய கவிதைகள் ஆகமாட்டா” என்று கூறுவார். இந்த வரையறை எல்லாப் படைப்புகளுக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.
இவை ஒருபுறமிருக்க, தமிழவன் அவர்களின் ஸ்டக்சுரலிஸம் நூல் வெளிவரும் போது நான் சேவியர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, தமிழ்த்துறைப் பேராசிரியர்களே அந்நூலிலுள்ள பத்தியளவுள்ள நீண்ட வாக்கியங்களை வாசித்துக் காட்டி, அவற்றைப் புரியாத படிகளென விமர்சித்துக் கொண்டிருந்தனர். அது இப்போதும் நினைவில் இருக்கிறது. அதே வேளையில், அது தோன்றிய பின்புதான் தமிழ் இலக்கிய விமர்சனப் பார்வையின் போக்கு மாறியுள்ளது. இலக்கியங்கள் மீது நவீன உத்திகளைப் புகுத்தி வாசகனை மறு வாசிப்பிற்கு உட்படுத்தியது. படைப்பாளிகளும் விமர்சகர்களாகும் நிலை உருவாகியிருக்கிறது என்ற பன்முகச் சாளரம் திறந்ததையும் காண முடிகிறது.
பேரா.சிவசு அவர்கள் எதை எடுத்துச் செய்தாலும் அது எதிர்காலத் தளமாக இருக்கும். அவர் எப்போதுமே அடுத்த தளத்தைப் பற்றி யோசிப்பவர்; நம்மை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்பவர். அவர் எடுத்து நடத்தும் பயிற்சிப் பட்டறைகளும் அப்படிப்பட்டதே. அந்த வகையில் தமிழவனின் இந்நாவல் எழுப்பிய வினாக்களாகட்டும்; விடைகளாகட்டும். அவை இப்போது தெளிவின்றித் தெரிந்தாலும் அவற்றின் உண்மைப் புலத்தை காலம் காட்டி விடும்.
* * *

