Saturday, March 29, 2014

முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஆய்வேடு எழுதுதல் தொடர்பாக திருநெல்வேலியில் "மேலும் "நடத்திய பயிற்சிப்பட்டறை :முனைவர்.ச.மகாதேவன்



திருநெல்வேலியில் உள்ளமேலும்"இலக்கிய அமைப்பும் தமிழ்வளர்ச்சிப்பண்பாட்டு மையமும் இணைந்து இளமுனைவர்,முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஆய்வேடு எழுதுதல் தொடர்பான பயிற்சிப்பட்டறையை 29.3.14 அன்று காலை 10  மணி முதல் மாலை 4 மணி வரை திருநெல்வேலி,பெருமாள்புரத்தில் உள்ள தமிழ்வளர்ச்சிப்பண்பாட்டு மையஅரங்கில் நடத்தின.சாகித்திய அகாதமி விருது பெற்ற முதுபெரும் எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் மறைவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும்”இலக்கிய அமைப்பின் தலைவர் முனைவர் வே.கட்டளை கைலாசம் வரவேற்றுப் பேசினார்.“மேலும்”இலக்கிய அமைப்பின் செயலாளர் முனைவர் ச.மகாதேவன் அறிமுக உரையாற்றினார்.

நூல்வெளியீட்டுவிழா
 தமிழ்வளர்ச்சிப்பண்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் கரிகாலன் விழாவுக்குத் தலைமைதாங்கி பேராசிரியர் சிவசுவின் “இலக்கியத்தைப் புதிதாய் எழுதுவது எப்படி?எனும் நூலை வெளியிட, போலந்து வார்சா பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் தமிழவன்,தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் இலக்கியவியல் தலைவர்  பேராசிரியர் துரை.சீனிச்சாமி,பேராசிரியர் மாணிக்கம்,ம.தி.தா கல்லூரிப் பேராசிரியர்கள் கண்ணா கருப்பையா,சங்கரவீரபத்திரன்,முனைவர் குருசண்முகநாதன் ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.
முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கான பயிலரங்கு
தமிழ்த்துறையில் இளமுனைவர் பட்டம் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கான பயிலரங்கைத் தொடங்கிவைத்து “மேலும்’’இலக்கிய அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் சிவசு “ஆய்வுக்களங்களின் தேக்கம்” எனும் தலைப்பில் தொடக்கஉரையாற்றினார்.
“தமிழில் பெண்விமர்சகர்கள் இல்லாதது வருத்ததிற்குரியது”:தமிழவன்
முதல் அமர்வில் போலந்து வார்சா பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் தமிழவன் பேசும்போது “தமிழ்ஆய்வுகள் வருத்தமளிக்கின்றன.பிரபலத் திரைப்படப் பாடலாசிரியர்களின் பாடல்களை ஆராய்ந்து எளிதாக முனைவர் பட்டம் பெற்றுவிடும் அளவு தமிழ்ஆய்வுச்சூழல் மாறிவிட்டது. பத்து ஞானபீடப் பரிசுகளை வென்ற கன்னடமொழியில் தீவிரமான இலக்கியங்களை வாசிக்கவும் நேசிக்கவும் செய்கிறார்கள்.ஆனால் தமிழ்ஆய்வாளர்கள் சமகால எழுத்தாளர்களின் படிப்புகளைப் படிக்காமலே ஆய்வுமேற்கொண்டு பட்டமும் பெற்றுவிடுகின்றனர்.தமிழ்இலக்கியம் படிக்க ஆர்வம் இல்லாத இளைய சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது.தமிழ்ச்சிந்தனை மரபின் வேராகத் திகழும் தொல்காப்பியத்தின்,நன்னூலின் அடிப்படையில் தமிழாய்வுகள் நடைபெற வேண்டும்.இலக்கணத்தின் துணைகொண்டு இலக்கிய ஆய்வுகள் நடைபெறவேண்டும். இலக்கணத்திற்கும் இலக்கியத்திற்கும் ஊடுபாவு உறவு உண்டு.தமிழ் விமர்சனத்துறையில் பெண்கள் யாருமில்லை என்பது வருத்தததிற்குரியது.பல நூல்களை ஆழமாகப் பயிலும்போதுதான் நமக்கென்று தனிக்கருத்தியல் உருவாகும்.”என்று பேசினார்.
ஆய்வு ஒன்றே அறிவைக் கூர்மைப்படுத்தும்: பேராசிரியர் முனைவர் துரை.சீனிச்சாமி
இரண்டாம் அமர்வில் தஞ்சைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் இலக்கியத்துறைத் தலைவர்  பேராசிரியர் முனைவர் துரை.சீனிச்சாமி சிறப்புரையாற்றும்போது,
“தமிழ் வாழ்க”என்று உணர்வுப்பூர்வமாகத் தமிழை அணுகுகிறோமே தவிர அதன் தொன்மைகுறித்து அறிவுபூர்வமான தேடல் நம்மிடம் இல்லாமல்போனது வருத்ததிற்குரியது.பழந்தமிழ்நூல்களோடு அந்நூல்களுக்கு உரைஎழுதிய உரையாசிரியர்களையும் ஆராயவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.சங்கஇலக்கியப்பாடல்களைப் படிக்கும்போது நாம் பயன்படுத்தும் தலைவன் தலைவி என்ற சொற்கள் தொல்காப்பியத்தில் இல்லை;கிழவன்,கிழத்தி என்ற சொற்களைத்தான் பார்க்கமுடிகிறது.அப்படியானால் தலைவன் தலைவி என்ற சொற்களை இடையில் சேர்த்ததுயார்?திணை,துறை  அமைப்பு யார் ?பழந்தமிழ் மக்களின் இனவரலாறு எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும்.மூலநூலைப் படிக்காமாலேயே நாம் முனைவர் பட்ட ஆய்வுகளை நடக்திக்கொண்டிருக்கிறோம்.மொழிஇன்று வியாபாரத்திற்குரிய பொருளாகிவிட்டது.குதிரைக்குக் கடிவாளம் போட்டது மாதிரி நாம் ஒரே போன்ற ஆய்வுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம்.அதனால் தரமான திறனாய்வுநூல்கள் தமிழில் குறையத்தொடங்கியுள்ளன.இணையம் வந்துவிட்ட அறிவியல் சூழலில் வீட்டில்இருந்துகூட நம்மால் எழுதமுடிகிறது,உலகத்தோடு தொடர்பு கொள்ளமுடிகிறது.மொழியியல் அறிவு இல்லாமல் தமிழ்ஆய்வுகளை நிகழ்த்திவிட முடியாது.அமர்ந்து வாசிக்கும்போது பழந்தமிழ் நூல்களின் மகத்துவம் புரிகிறது.அப்பாடல்களை வரிவரியாக சீர்சீராகப் பிரியுங்கள் படியுங்கள்..புதிதுபுதிதாய் ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.நூலை எப்படிப் படிப்பது என்றுகூடத் தெரியாமல் எப்படி ஆய்வு செய்வது? ஆய்வு ஒன்றே அறிவைக் கூர்மைப்படுத்தும் அறிவைக் கூர்மையாக்கும் ஆய்வுகளில் ஈடுபடுங்கள்” என்று பேசினார்.
 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கான ஆற்றுகை:
திருநெல்வேலி தூத்துக்குடி,கன்னியாகுமரி,விருதுநகர் மாவட்டங்களைச் சார்ந்த ஆய்வுஆற்றுப்படுத்தும் பயிலரங்கில் நூறு முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கள் பங்கேற்றனர்.மதிதா இந்துக் கல்லூரிப் பேராசிரியர்கள் செல்லப்பா,சங்கரவீரபத்திரன்,கண்ணா கருப்பையா சாரதா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பர்வதகிருஷ்ணம்மாள்,மேலநீலிதநல்லூர் கல்லூரிப் பேராசிரியர் ஹரிஹரன்,அரசினர் ராணி அண்ணா மகளிர் கல்லூரிப் பேராசிரியர் வேலம்மாள்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன்,சிவசு,கட்டளை கைலாசம் ஆகியோர் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சியை நடத்தி ஆய்வாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.மேலும் அமைப்பின் பொருளாளர் வேலம்மாள் நன்றியுரை ஆற்றினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேலும் அமைப்பும் தமிழ்வளர்ச்சிப் பண்பாட்டு மையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.


பேராசிரியர் சிவசு,முனைவர் வே.கட்டளை கைலாசம்,முனைவர் ச.மகாதேவன்,முனைவர் ந.வேலம்மாள்
மேலும்இலக்கிய அமைப்பு,திருநெல்வேலி













No comments:

Post a Comment