Monday, January 25, 2016

பாபநாசத்தில் மேலும் அமைப்பு நடத்திய கணினித் தமிழ் பயிலரங்கு




பாபாநாசம் கல்லூரியின் குளிரூட்டப்பட்ட அறையில் அற்புதமாய் கணினித்தமிழ்க் கருத்தரங்கு 29.6.2015 அன்று காலை பத்துமுப்பதுக்குத் தொடங்கியது. எப்போதும் அழகாய் தயாரித்து உரையாற்றும் கல்லூரிமுதல்வர் முனைவர் அழகப்பன் தலைமையுரையாற்றினார்.தமிழ்த்துறைத்தலைவர் சிவசங்கரனின் வரவேற்புரை எளிமையாக இருந்தது.கணினித்துறையின் அண்மைக்காலப் போக்குகளைத் தமிழ்ப்பின்னணியை மையமிட்டுச் சிறு வாழ்த்துரை வழங்கினேன்.

பேராசிரியர் சிவசு வழக்கம்போல் ஆழமான கருத்துகளோடு மிகஇயல்பாக அறிமுகவுரையாற்றினார். பேராசிரியர் தெய்வசுந்தரம் முகநூல் நண்பராக அறிமுகமானவர் என்பதால் வெகுஇயல்பாகப் பேச்சைத்தொடங்கிச் சுலபமாய் நட்புக்கொள்ளமுடிந்தது.

சக நண்பர்கள் சங்கரவீரபத்திரன், ஹரிஹரன், அசின் தங்கராஜ் ஆகியோர் நிகழ்வை உயிர்த்துடிப்பாக்கினர். பேராசிரியர் தெய்வசுந்தரம் மொழியியலோடு கணினியியலையும் தமிழியலையும் இணைத்து பத்தாண்டுகள் ஆய்வுநிகழ்த்தி மிகப்பெரிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறார் என்பது அவர் சிறப்புரை நிகழ்த்தியபோது தெளிவாகப்புரிந்தது.

இணைய உலகில் தமிழ்சிகரம்தொட்டிருக்கும் இந்த வேளையிலும்கூட எம்.எஸ்.போன்ற நிறுவனங்கள் எளிதாய் சந்தைப்படுத்த முடியும் மொழிகளை மட்டுமே கண்டுகொண்டிருக்கிறது என்பதும்,பெருகணினி மென்பொருள் நிறுவனங்களால் கண்டுகொள்ளப்படாத மொழியாகத் தமிழ் திகழ்வதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

இந்தச் சோகமயமான சூழ்நிலையில் பலபல்கலைக்கழகங்கள் இணைந்து ஆற்றவேண்டிய பெரும்பணியை பேராசிரியர் தெய்வசுந்தரம் ஆறுமென்பொறியாளர்களைக்கொண்டு சாதித்துக் காட்டியிருப்பதை அவர் காட்டிய செயல்விளக்கத்திலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.பேசியதை அப்படியே தட்டச்சு செய்துதரும் மொழித்தொழில்நுட்பம் வந்தபின்னரும்கூடத் தமிழுக்கு முறையான பிழைதிருத்தி வராதுபோனது துயரமானநிகழ்வே.நாற்பதாயிரம் சொற்களுக்கு மேல்சேகரித்து மின்அகராதியைத் தந்திருக்கிறார்.ஏதேனும் புதியசொற்கள் நாளிதழ்களில் வந்தால் அவற்றை அகராதியில் சேர்க்கவும் அவரது மின்தமிழ் மென்பொருளில் வழியமைத்துத்தந்துள்ளார்.

எளிதாய் சந்திப்பிழைகளை நீக்கவும் ஏன் குறித்த இடத்தில் அந்த எழுத்திற்குப்பின் ஒற்றுமிகுகிறது என்பதற்கான விளக்கத்தை அவர் உருவாக்கியுள்ள மென்பொருள் அழகாக விளக்குகிறது. பேச்சுவழக்கில் நாம் ஆங்கிலம் கலந்துபேசுவதைத் தவிர்க்க அம்மென்பொருளே அதை அழகாகத் தமிழ்ப்படுத்தித் தருகிறது.

ஒரு சொல்லைத்தந்தால் அதன் வேர்ச்சொல்,அது எவ்வகைப் பெயர்,அதன் இலக்கணக்குறிப்பு ஆகியவற்றைத் தருகிறது. 49 வினாடியில் அவர் உருவாக்கிய மின்தமிழ் 400 சொற்களை ஆராய்ந்து அதில் உள்ள பிழைகளைப் பட்டியலிடுகிறது. ஆய்வுமாணவர்களுக்கு உதவும் கருவிகளையும் அவர் தந்துள்ளார். அகரவரிசைப்படி எழுதவும், எம்எல்ஏ.அமைப்பில் ஆய்வேடு அமையவும் அவர் மென்பொருள் உதவுகிறது.

சத்தமின்றி சாதனை செய்துவிட்டு சகதமிழ் அறிஞர்களை முகநூலில் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்கள் உண்மையில் தெய்வீக சுந்தரம்தான். பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களைப் பாராட்டி சிறந்தமென்பொருள் அறிஞருக்கான விருதினைத் தமிழக முதல்வர் அவர்கள் வழங்கவிருக்கிறார்கள்.அவருக்கு மேலும் சார்பில் இனிய நல்வாழ்த்துகள்.
*
சௌந்தர மகாதேவன்

No comments:

Post a Comment